கட்டுரை

ம.தி.மு.க. சலசலப்பு

அரசியல் செய்தியாளர்

தேர்தல் அரசியல் தேவை இல்லை என்று வைகோ அறிவித்துவிடலாம்- டாக்டர் மாசிலாமணி

சுமார் 22 ஆண்டுகாலம் வைகோவுடன் மதிமுகவில் பயணம் செய்து இன்றைக்கு அந்த கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறேன் என்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. கட்சி தொடங்கியதிலிருந்து தொடர்ச்சியான போராட்டங்களைப் பார்த்திருக்கிறோம். கட்சி நடத்துவது என்றால் வெறும் போராட்டங்கள் மூலமே நடத்திவிடமுடியாது. அரசியலில் அதிகாரப் பகிர்வை நோக்கியும் செயல்படவேண்டும். அப்படி அதிகாரம் கிடைத் தால் கட்சியைக் காப்பாற்ற முடியும். மதிமுகவில் ஆரம்பகாலத்தில் இணைந்த பல முக்கிய தலைவர்கள் எல்லாம் இன்று விலகிப் போய்விட்டார்கள். அவர்களுக்கு ஒரு சலிப்பும் சோர்வும் ஏற்பட்டதே காரணம். அரசியல் களத்தில் வெற்றிபெறவே முடியாமல் போராட்ட களத்திலேயே இருப்பதென்றால், எப்படி? எங்களால் முடியவில்லை.

இன்றைக்கு பாஜக ஆட்சியில் இருக்கும் சூழலில் திராவிட இயக்கங்களை அழிக்க, வீழ்த்த இந்துத்துவ சக்திகள் முயற்சி செய்துவருகின்றன. அதிலிருந்து திராவிட இயக்கங்களைப் பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று நினைத்தோம். அதற்கு திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவேண்டும் எனக் கருதினோம். அவரும் ஜூன் மாதம் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் இந்த நிலைப்பாட்டில்தான் எங்களுடன் பேசினார். கலைஞரின் அக்கா மரணத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தார். ஸ்டாலின் இல்லத் திருமணத்துக்குச் சென்றார்; உரையாற்றினார். 2016 தேர்தலில் திமுகவுடன் தான் கூட்டணி என்ற எண்ணத்தைக் கட்சிக்காரர்களிடம் உருவாக்கி இருந்தார். ஆனால் மறுபடியும் இப்போது மக்கள் நலக்கூட்டமைப்பு என்ற ஐந்து கட்சிக் கூட்டணியை உருவாக்கி அதன் மூலம் தேர்தலைச் சந்திப்போம் என்கிறார். எப்படி இந்த கூட்டணி வெல்லும்? டெபாசிட் கூட வாங்க இயலாது. இதையும் அவரே சொல்கிறார். ஒரு பத்து பேராவது 2016 தேர்தலில் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்து சட்டமன்றம் போகவேண்டும்; அதன் பின்னால் வரும் உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களை வெல்லவேண்டும் என்று எதிர்பார்த்தோம். இப்படி அரசியல் பொறுப்புகள் கிடைத்தால்தானே எங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு ஏதாவது உதவிகள் செய்யமுடியும்?

கடந்த  ஆண்டுகளில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று செயல்பட்டு கையிருப்பெல்லாம் கரைந்துவிட்டது. இன்றைக்கு அரசியல் என்றால் எவ்வளவு பொருளாதாரம் செலவாகக்கூடிய ஒன்றாக உள்ளது என்று அனைவருக்கும் தெரியும். நாங்கள் போய் ஊருக்குப் பத்துபேராக இருக்கும் கட்சி உறுப்பினர்களை ஆர்ப்பாட்டத்துக்கு வா என்றால் வர மறுக்கிறார்கள்.

திமுக ஊழல் கட்சி என்கிறார். பின் ஏன் 1999-ல் கூட்டணி வைத்தோம்? 2004 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தோம்?  ஊழல், இனத்துரோகம் என்பதெல்லாம் பழைய கதை. இன்றைக்கு அரசியலில் கட்சி நிற்கவேண்டுமென்றால் கொஞ்சம் எம்.எல்.ஏக்கள் தேவை. அதற்கான வழியைப் பார்க்க மறுக்கிறார். 2006-ல் திமுக கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறி போயஸ் தோட்டம் சென்றார். அதன் பிறகு என்ன ஆனது?

மதிமுகவுக்கு என்ன ஆனது என்றே எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. திராவிட இயக்கத்தில் முக்கிய சக்தியாக கட்சி வரும் என்று எதிர்பார்த்துத்தான் இவ்வளவு ஆண்டுகள் அவருடன் காத்திருந்தோம். மக்கள் ஏனோ ஏற்றுக்கொள்ளவில்லை. ஏதோ குறை இருக்கிறது; என்னவென்று தெரியவில்லை.

பாலைவனத்தில் நான் பயணம் செய்கிறேன். விருப்பம் இருப்பவர்கள் வாருங்கள் என்கிறார். எங்களால் முடியவில்லை.  இதற்குப் பதிலாக அவர் நான் பெரியார் பாதையில் சமூக இயக்கமாக இருக்கிறேன்; தேர்தல் அரசியல் தேவைஇல்லை என்று அறிவித்துவிடலாம். இருப்பவர்கள் இருப்பார்கள்; மற்றவர்கள் வெளியேறிவிடுவார்கள் அல்லவா? பொறுப்புகளுக்கு ஆசைப்பட்டு வெளியேறுகிறார்கள்; துரோகம் செய்கிறார்கள் என்கிறார். அரசியலில் இருப்பவர்கள் பொறுப்புகளுக்கு வர ஆசைப்படுவது தவறா? அது எப்படி துரோகம் ஆகும்? அப்படியே ஆசைப்பட்டிருந்தால் இவருடன் 22 ஆண்டுகள் இருந்திருப்போமா? எப்போதே வெளியேறி இருக்க மாட்டோமா? எல்லா கதவுகளும் திறந்துதானே இருந்தன. அவருடன் எங்களுக்கு எந்த தனிப்பட்ட பிணக்கும் இல்லை. வெற்றிக்கூட்டணியாக திமுகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்றோம். எங்கள் கருத்தை அவர் ஏற்கவில்லை. வெளியேறிவிட்டோம்.

கலைஞர் உருத்தெரியாமல் ஆக்கிவிடுவார் – மல்லை சத்யா

திமுக தலைவர் கலைஞரின் மூத்தமகன் மு.க.முத்து கட்சியை விட்டு விலகியதால் அவர் கட்சியைக் கலைத்துவிடவில்லை; அழகிரியை கட்சியை விட்டு விலக்கியிருப்பதால் அவர் கட்சியைக் கலைத்துவிடவில்லை. அதுபோல் தான் மறுமலர்ச்சி திமுகவில் இருந்து சிலர் விலகியதாலும் சிலர் நீக்கப்பட்டதாலும் இந்த கட்சி குலைந்துவிடப்போவதில்லை; இலக்கை நோக்கிய நெடும்பயணம் இது என்றுதான் வைகோ தொடக்கத்திலேயே கூறினார். மறுமலர்ச்சி எளிதில் கிடைத்துவிடாது. நெடும் பயணம் இது. பாலின் பக்குவம் தயிர்; தயிரின் பக்குவம் வெண்ணெய்; வெண்ணெயின் பக்குவம் நெய். இது ஒரு நெடும்பயணம். தமிழகத்திலே கோடீஸ்வரக் கட்சிகளுக்கு நடுவே கொள்கை குறிக்கோள்களுக்காக மதிமுக போராடிவருவதை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துவருகிறார்கள்.

திமுக தலைவர் தொண்ணூறு வயதைக் கடந்த நிலையிலும் தன்னுடைய பிரித்தாளும் சூழ்ச்சியை, கட்சிகளை உடைக்கும் வேலைகளை விட்டுவிடவில்லை. இங்கே பதவியை எதிர்பார்த்து வந்தவர்கள், கிடைக்க வில்லை என்று விலகிச்செல்கிறார்கள். வைகோ தன்னை நாடி பதவிகள் வந்தபோது தன்னை நம்பி வந்தவர்களுக்கு அதை அளித்தவர். செஞ்சியாருக்கும் கண்ணப்பனுக்கு மந்திரி பதவி அளித்து, தான் ஏற்காமல் மறுத்தவர். கணேசமூர்த்தி, கிருஷ்ணன், எல்.கணேசன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்று எம்பி பதவிகளை வழங்கியவர். அதிமுகவிடம் 35 சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்று வழங்கிவர்தானே?

ஆட்சி மன்றத்தில் இடம் கிடைக்காமல் சலிப்பு ஏற்படுகிறது என்கிறார்கள். பொதுவுடைமை இயக்கங்கள் எங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டவை. அவை இன்னும் கொள்கைப் பிடிப்போடு நடைபோடவில்லையா? பாமக எங்களுக்கு முன்பாகத்தான் தொடங்கப்பட்டது. அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்? ஆட்சியும் அதிகாரமும் இவர்களிடம் வந்துவிட்டதா?

சுயநலம் சார்ந்து பொதுநலன் கருதாமல் இருப்பவர்களே இன்று கட்சியை விட்டு விலகிச் செல்கிறார்கள். அவர்கள் திமுகவில் என்ன காத்திருக்கிறது என்பதை சீக்கிரமே தெரிந்துகொள்வார்கள். கலைஞருடையது மகாபாரதத்தில் வருகிற திருதிராஷ்டிர ஆலிங்கனம்! உருத்தெரியாமல் ஆக்கிவிடுவார். மதுராந்தகம் ஆறுமுகம் திமுகவில் ச.ம. உறுப்பினர். மிசா கைதி. அரசியல் சாசனத்தை எரித்த பத்து ச.ம. உக்களில் ஒருவர். அப்பேற்பட்டவர் தத்துவமா தலைமையா என்றால் தத்துவத்தின் பின் நிற்பேன் என்று வைகோ பின்னால் 1993-ல் திமுகவில் இருந்து வெளியேறினார். 98-ல் இங்கே சீட் கிடைக்காததால் திமுகவுக்கு மு.க.ஸ்டாலினால் அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னால் என்ன ஆனது? அவர் இறந்தபோது கரைவேட்டி கட்டிய ஒருவர்கூட அவருக்கு அஞ்சலி செலுத்த செல்லவில்லை! செஞ்சியார் 98லிருந்து 2009 வரை மதிமுகவில் எம்பியாக அமைச்சராக இருந்தார். திமுக சென்றபின்னர் அவர் நிலை என்ன? காஞ்சிபுரத்தின் பாலவாக்கம் சோமு திமுகவில் சேர்ந்தபோது அவர் தன் குடும்பத்துடன் மட்டும் சென்று இணைந்தார். அதே நாள் மாலை முல்லைவேந்தன் திமுகவில் இருந்து 10,000 பேருடன் வெளியேறினாரே அது ஏன் விவாதத்துக்கு வரவில்லை. ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பதால் மதிமுகவை மட்டும் அதன் மதுவிலக்கு, அறம் சார்ந்த போராட்டங்களுக்காக குறிவைக்கிறார்களா? நெருக்கடிகளை சந்திக்க சந்திக்க மதிமுக மேலும் மேலும் புடம்போட்ட தங்கமாகப் பிரகாசிக்கும்!

அக்டோபர், 2015.